காசா பிரச்னைக்கு விரிவான தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை ட்ரம்பிடம் வலியுறுத்தினேன்; பிரதமர் மீண்டும் பேச்சு

கோலாலாம்பூர், அக்டோபர்-30,
47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்புடனான சந்திப்புகளின் போது, காசா பிரச்னைக்கு ஒரு விரிவான தீர்வை தொடர்ந்து வலியுறுத்த மலேசியா ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டது.
ட்ரம்புடனான ஒவ்வொரு சந்திப்பையும், அது அதிகாரப்பூர்வமாகவோ அல்லது அதிகாரப்பூர்வமற்றதாகவோ இருந்தாலும், காசாவின் நிலைமை குறித்த கவலைகளை எழுப்ப முழுமையாகப் பயன்படுத்தியதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
போர் நிறுத்தம் மட்டுமல்லாமல் காசா பிரச்னைக்கு ஒரு விரிவான தீர்வு வேண்டுமென்பதே மலேசியாவின் நிலைப்பாடு.
அவ்வகையில், பாலஸ்தீன இறையாண்மையை அங்கீகரிப்பதன் மூலம் ஒரு விரிவான தீர்வின் அவசியத்தை ட்ரம்பிடம் விளக்கியதாக அன்வார் கூறினார்.
காசா மற்றும் பாலஸ்தீன மக்களின் முழுமையான இறையாண்மை உரிமைகளை அங்கீகரிக்காமல் தாக்குதல்களை நிறுத்துவதன் மூலம் மட்டுமே காசா பிரச்னைக்குத் தீர்வாகாது என, இன்று மக்களவையில் பிரதமரின் கேள்வி நேரத்தின் போது அன்வார் தெரிவித்தார்.
வர்த்தக அம்சத்தைத் தவிர, ட்டிரம்புடனான சந்திப்பிலிருந்து வேறு என்ன நன்மைகள் கிடைத்தன என்பதைக் கூறுமாறு பிரதமரிடம் கேட்கப்பட்டது.



