
பிறை, நவம்பர்-4,
பினாங்கு, பிறை சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தராஜுவின் 2025 தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு அண்மையில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
நவம்பர் 1 ஆம் தேதி தாமான் சாய் லெங் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற அந்நிகழ்வில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 2,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக மாநில முதல்வர் சௌ கோன் இயோவ் (Chow Kon Yeow) முன்னாள் முதல்வர் லிம் குவான் எங், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

பிறை சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் சுந்தராஜூ நடத்தும் மூன்றாவது தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு இதுவாகும்.
இந்த 27 மாத பொது வாழ்க்கை, வணிக உலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய தமக்கு ஓரு அர்த்தமுள்ள கட்டமாக விளங்குவதாக விழாவில் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுடன் ‘அங் பாவ்’ பெருநாள் பண அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன.
இது மாநிலத்தின் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக அமைந்தது.
இந்த தீபாவளி உபசரிப்பு வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல; மாறாக மக்களுக்கும் மாநிலத் தலைவர்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவின் வெளிப்பாடாகவும் இருந்ததாக சுந்தராஜூ மனநிறைவுத் தெரிவித்தார்.



