
சென்னை, நவம்பர்-10,
‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவரான நடிகர் அபிநய், உடல் நலக் குறைவால் 44 வயதில் இன்று காலமானார்.
நாட்பட்ட கல்லீரல் நோயால் போராடி வந்த அபிநயின் உயிர் இன்று அதிகாலை 4 மணிக்கு பிரிந்தது.
தனுஷ் நடிப்பில் 2002-ஆம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் அபிநய்; பின்னர் ‘ஜங்ஷன்’, சிங்கார சென்னை, பொன்மேகலை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
அப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால், ‘என்றென்றும் புன்னகை’, ‘ஆறுமுகம்’, ‘வல்லவனுக்குப் புல்லுன் ஆயுதம் ’ போன்ற படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருந்தார்.
தவிர, விஜயின் ‘துப்பாகி’ படத்தில் வில்லனுக்கு இவர் தான் குரல் கொடுத்திருந்தார்.
சிறிது காலம் சினிமாவில் இருந்து காணாமல் போனவர், கல்லீரல் நோயால் உடல் மெலிந்து நிலையில் சிகிச்சைக்காக 28 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக வீடியோ வெளியிட்டு மீண்டும் கவனம் பெற்றார்.
இவர் கடைசியாக செப்டம்பரில் விஜய் டிவி புகழ் பாலாவின் ’காந்திக் கண்ணாடி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில், அவர் காலமாகியுள்ளது இரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபிநய்க்கு இறுதிச் சடங்கு செய்வதற்குக் கூட ஆள் இல்லை என தகவல்கள் பரவி வரும் நிலையில், சமூக ஊடங்கங்களில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.



