
கோலாலம்பூர், நவ 12 – 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 3,185 எச்.ஐ.வி நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இது முந்தைய ஆண்டில் பதிவான 3,222 நோயாளிகளுடன் ஒப்பிடும்போது சற்று குறைவாகும் .
2002 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கிடையில் நாட்டில் ஒட்டுமொத்தமாக புதிய எச்.ஐ.வி தொற்றுகள் 54 விழுக்காடு குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அகமட் (Dzulkifli Ahmad ) தெரிவித்தார். ஓரினச்சேர்க்கை அல்லது இருபாலின உறவுகளினால் 2024 ஆம் ஆண்டில் 2,037 பேர் எச்.ஐ.வி நோய்ன் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் 1,995 பேர் இந்நோய்க்குள்ளானதை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு இரண்டு விழுக்காடு அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் சுல்கிப்லி கூறினார்.
LGBTQ தரப்பைச் சேர்ந்த எச்.ஐ.வி நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட எச்.ஐ.வி நோயாளிகளின் எண்ணிக்கை குறித்த அண்மைய மற்றும் இதற்கு முந்தைய ஆண்டின் புள்ளி விவரங்கள் குறித்து பெரிக்காத்தான் நேசனல் ஜாசின் நாடாளுமன்ற உறுப்பினர் Zulkifli Ismail வினவிய கேள்விக்கு பதில் அளித்தபோது சுல்கிப்ளி அகமட் இதனை தெரிவித்தார்.



