
கோலாலம்பூர், நவம்பர்-13, சபாவின் 40% வருவாய் உரிமைப் பற்றிய உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து புத்ராஜெயா மேல்முறையீடு செய்யும்.
ஆனால், அது தீர்ப்பை எதிர்த்து அல்ல, மாறாக தீர்ப்புக்கு நீதிபதி முன்வைத்த காரணங்களை எதிர்த்து மட்டுமே செய்யப்படுகிறது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மக்களவையில் அதனைத் தெளிவுப்படுத்தினார்.
அதாவது, நீதிமன்றம் தனது தீர்ப்பில் 1974 முதல் அனைத்து மத்திய மற்றும் சபா மாநில அரசுகள் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக நடந்துகொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு என விளக்கிய அன்வார், அப்பகுதியை மட்டும் தீர்ப்பிலிருந்து நீக்குமாறே புத்ராஜெயா மேல்முறையீடு செய்கிறது.
மேலும், 2021-க்குப் பிறகு செய்யப்பட்ட சிறப்பு மறுஆய்வும் நியாயமல்ல மற்றும் சட்டப்பூர்வமானது அல்ல என நீதிபதி கூறிய பகுதியையும் அரசாங்கம் தனது மேல்முறையீட்டில் சேர்த்துக்கொண்டுள்ளது.
மொத்தத்தில், அரசாங்கம் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறது; ஆனால் ‘பொத்தாம் பொதுவாக’ 50 ஆண்டுகளில் ஆட்சியிலிருந்த, இருக்கும் அனைத்து அரசாங்கங்கள் மீதும் பழிபோடப்படுவதை தான் எதிர்க்கிறோம் என அன்வார் கூறினார்.



