தமிழ்க் கல்விக்கான முக்கிய முன்னெடுப்பு; பத்து காஜா சிவகுமாரின் கேள்விக்கு அரசாங்கம் பதில்

கோலாலம்பூர், நவம்பர்-14, நாட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கான ஆதரவு அரசியலமைப்புச் சட்டம், 1996 கல்வி சட்டம் மற்றும் தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றின் கீழ் தொடர்ந்து வலுப்படுத்தப்படும்.
மக்களவையில் பத்து காஜா உறுப்பினர் வி. சிவகுமார் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில், தமிழ் கல்விக்கான முக்கிய முன்னேற்றங்களையும் கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியது.
இதில் தமிழ் மொழி கற்பித்தல் தொடர்புமொழியாகத் தொடருவது, பாடத்திட்டத் தரத்தை உயர்த்துவது மற்றும் தேசிய கல்வி அமைப்பில் தாய்மொழிப் பள்ளிகளின் நிலையை பாதுகாப்பதும் அடங்கும்.
முக்கிய அறிவிப்புகளில், குவாந்தான், பெசேராவில் புதிதாகக் கட்டப்படவுள்ள ஜெராம் தோட்டத் பள்ளியின் முன்னேற்றமும் அடங்கும் .
3 ஏக்கர் அரசு நிலத்தில் 6 வகுப்பறைகள், நிர்வாக மற்றும் கற்பித்தல் வசதிகளோடு அப்பள்ளியைக் கட்டுவதற்காக RM22 மில்லியன் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, லாடாங் சாகா, சிம்பாங் பெர்தாங், சீஃபீல்டு, எஃபிங்காம் உள்ளிட்ட பல தமிழ் பள்ளிகள் மேம்படுத்தப்பட்டோ அல்லது இடமாற்றம் செய்யப்பட்டோ உள்ளன என்பதையும் அமைச்சகம் தெரிவித்தது.
பேராக்கின் கோப்பெங் தமிழ்ப் பள்ளியின் முழு மறுகட்டுமானத்திற்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது.
அங்கு பழுதடைந்த 3 கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன; இதனால் புதிய வகுப்பறைகள், நிர்வாக அலுவலகம், ஆசிரியர் அறை மற்றும் விளையாட்டு சேமிப்பு அறை கட்டப்படும்.
மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கான நடவடிக்கையாக, இணைந்த வகுப்புகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பள்ளிகளைத் தொடருவது மற்றும் தேவையானபோது பள்ளிகளை மாற்றுவது போன்ற தமிழ் சமூகத்தை பாதுகாக்கும் திட்டங்களையும் அமைச்சு பட்டியலிட்டது.
இந்த முன்னேற்றங்களை வரவேற்ற சிவகுமார், தமிழ்க் கல்விக்கான நீண்டகால நிலைத்தன்மை மற்றும் தரத்தை உறுதிச் செய்வதில் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று தெரிவித்தார்.



