
கோலாலம்பூர், நவம்பர்-23 – மலேசிய இளைஞர் மேம்பாட்டுக்கு மற்றொரு பெருமையாக, IYC எனப்படும் அனைத்துலக இளைஞர் மையத்தின் துணை இயக்குநரான எஸ். பத்ம சீலன், ஆசிய வட்டாரத்திற்கான 2025 காமன்வெல்த் இளைஞர் தொழிலாளர் விருதை வென்றுள்ளார்.
இவ்விருது 5-ஆவது உலக இளைஞர் தொழிலாளர் மாநாட்டில் வழங்கப்பட்டது.
25 ஆண்டுகளாக இளைஞர் வளர்ச்சியில் பணியாற்றி வரும் பத்ம சீலன், தனது பயணத்தை மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தில் ஒரு தன்னார்வலராகத் தொடங்கினார்.
பின்னர் உள்ளூர் மற்றும் அனைத்துலக அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்து, 50,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களை தலைமைத்துவம், திறன் மேம்பாடு, சமாதான கட்டமைப்பு மற்றும் அனைத்துலக பரிமாற்ற திட்டங்கள் மூலம் முன்னேற்றியுள்ளார்.
விருதுப் பெற்ற மகிழ்ச்சியில் நன்றியையும் உணர்ச்சியையும் தெரிவித்த பத்ம சீலன், இது “உற்சாகம், மனிதர்கள், நோக்கம்” என்ற தத்துவத்தின் பலன் என கூறினார்.
2026 ஜனவரி முதல் மலேசிய அரசாங்கம் இளைஞர் வயதை 15 முதல் 40 திலிருந்து 15 முதல் 30 தாக மாற்ற உள்ள நிலையில், இளைஞர் தொழிலாளர்களுக்கு அரசு அதிக அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விருது தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல; மாறாக மலேசியா மற்றும் ஆசிய வட்டாரத்தில் இளைஞர் மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டை உருவாக்கும் அனைத்து இளைஞர் பணியாளர்களுக்கும் அர்ப்பணிக்கப்படுவதாக பத்ம சீலன் தெரிவித்தார்.



