மலாக்காவில் போலீசைத் தாக்கிய கொள்ளையர்கள்; துப்பாக்கி தாக்குதலில் மூவர் பலி

மலாக்கா, நவம்பர் 24 – போலீசாரின் பட்டியலில் இருந்த முக்கிய மூன்று கொள்ளையர்கள், இன்று காலை டுரியான் செம்பனைத் தோட்டத்தில் நடைபெற்ற அதிரடி நடவடிக்கையில் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்தக் கைது செய்யும் முயற்சியின் போது அம்மூவரில் ஒருவன் அங்கிருந்த போலீசார் ஒருவரைக் கடுமையாக தாக்கியதோடு மட்டுமல்லாமல் அவரது இடது கையை வெட்டி அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் அளவிற்கு நடந்துள்ளான் என்று மாநில காவல் துறை தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் (Datuk Dzulkhairi Mukhtar) கூறினார்.
போலீசார் வேறு வழியின்றி துப்பாக்கியை கையில் எடுக்கும் சூழல் ஏற்பட்டதென்றும் அந்த துப்பாக்கி தாக்குதலில் மூவரும் சம்பவ இடத்தில் இறந்தனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அந்த மூன்று கொள்ளையர்களில் இருவர் ‘Geng DT’ எனப்படும் குண்டர் கும்பலைச் சார்ந்தவர்கள் என்று அறியப்படுகின்றது.
இந்த கும்பல் கடந்தாண்டு முதல் வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் உணவகங்களை இலக்கு வைத்து, சுமார் 20 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். அந்தக் குற்றச்செயல்களில் அவர்கள் சுமார் 1.3 மில்லியன் ரிங்கிட் பணத்தை திருடியதாக நம்பப்படுகின்றது.



