
ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-2 – மலேசியத் தமிழ்ப் பள்ளி மற்றும் தேசிய இடைநிலைப் பள்ளி மாணவர்கள் மீண்டும் உலக அரங்கில் நாட்டின் பெயரை உயர்த்தியுள்ளனர்.
Syscore Academy வழிகாட்டுதலின் கீழ், 24 மாணவர்கள் அண்மையில் தைவானில் நடைபெற்ற WRG 2025 ரோபோட்டிக் போட்டியில் பங்கேற்றனர்.
தைவான், ஜப்பான், தென் கொரியா, இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட10 நாடுகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில், மலேசிய மாணவர்கள் 80-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தனர்.


பதக்கங்களுடன் நாடு திரும்பிய மாணவர்களுக்கு, பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினரும், மாநிலத் தமிழ்ப் பள்ளிகளுக்கான சிறப்பு செயற்குழுத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜு அவர்களை எதிர்கொண்டு வரவேற்றார்.



மாணவர்களை வாழ்த்தியயோடு அவர்களின் பெற்றோர்களுடனும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.
ஒவ்வொரு மாணவரும் குறைந்தது ஒரு பதக்கத்தை பெற்றுள்ளனர்; இது கடந்தாண்டின் சாதனையை விட மிகப் பெரிய வெற்றியாகும்.
இந்த வெற்றி தமிழ் மாணவர்களின் திறமையை உலகளவில் நிரூபித்துள்ளது என பெருமிதம் தெரிவித்த சுந்தரராஜு, STEM, ரோபோடிக்ஸ் மற்றும் தொழில்நுட்பத்தில் மேலும் பல மாணவர்கள் பங்கேற்க வழிவகை செய்யப்படும் என உறுதியளித்தார்.



