
கோலாலாம்பூர், டிசம்பர்-4 – உணவகத் துறையில் வெளிநாட்டு தொழிலாளர்களை கொண்டு வருவதற்கான அனுமதி செயல்முறையில் இந்திய உணவகங்கள் மற்றும் நாசி கண்டார் உணவகங்களுக்கு எந்த வகையான பாகுபாடும் இல்லை என, அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
அனைத்து விண்ணப்பங்களும் ஒரே தரநிலைகளின் அடிப்படையில் தான் பரிசீலனை செய்யப்படுகின்றன.
அதில் தொழில் தேவைகள், நாட்டில் உள்ள தொழிலாளர் தரவுகள், மற்றும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள தொழிலாளர் கொள்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுவதாக, மேலவையில் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் கேட்ட கேள்விக்கு, உள்துறை அமைச்சான KDN பதிலளித்தது.
உணவகத் துறைக்காக மொத்தம் 11,000 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன; அவற்றில் 9,000 மாற்று கோட்டாக்கள் ஆகும். இந்திய மற்றும் நாசி கண்டார் உணவகங்களும் அதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடைவை.
இதுவே, எந்த விதமான பாகுபாடும் இல்லை என்பதற்கு சான்றாகும் என KDN கூறியது.
உணவங்களுக்கான வெளிநாட்டுத் தொழிலாளர் தருவிப்பு கோட்டாவில் பாகுபாடு உள்ளதா? அப்படி இருந்தால் அதற்கான காரணங்கள் என்ன என லிங்கேஷ்வரன் கேட்டிருந்தார்.
12-ஆவது மலேசியத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 15% உச்சவரம்பை நிலைநிறுத்தும் நோக்கில், நாட்டில், 2023 மார்ச் 18 முதல் வெளிநாட்டு தொழிலாளர் கோட்டா விண்ணப்பங்கள் நிறுத்தப்பட்டன.
வெளிநாட்டு தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதை படிப்படியாகக் குறைத்து, 2030-ஆம் ஆண்டுக்குள் 15% இருந்து 10% ஆகக் குறைப்பதே அக்கொள்கையின் நோக்கமாகும்.
எனினும் இவ்வாண்டு அக்டோபர் 1-ஆம் தேதி, அமைச்சரவை, 3 துறைகள் மற்றும் 10 துணைத்துறைகளில் case by case முறையில் அதாவது தேவைக்கேற்ப ஒவ்வொரு விண்ணப்பத்தையும் தனித்தனியாக பரிசீலித்து அனுமதி வழங்க ஒப்புதல் அளித்தது.
அதில் உணவகத் துறையும் ஒன்றாகும்.



