
கோலாலம்பூர், டிசம்பர்-5 – மலாக்காவில் 3 சந்தேகக் கொள்ளையர்கள் போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில்,
ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர், பிரதமர் துறையின் துணை அமைச்சர் எம். குலசேகரனை உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தில் மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணை முடியும் வரை தற்காலிக விடுப்பில் செல்ல வேண்டும் என்றும் ராயர் கேட்டுக் கொண்டார்.
மேலும், அனைத்து போலீஸ் அதிகாரிகளும் உடல் கேமராவை கட்டாயமாக அணிய வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் வெளியிட்ட ஆடியோ குரல் பதிவு, போலீஸ் கூறிய விளக்கத்துடன் முரண்படுகிறது.
குடும்பங்களின் வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலை குற்றச்சாட்டு பதிவுச் செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.
எனவே “என்ன நடந்தது என்பது பற்றி மக்களுக்கு உண்மை தெரிந்தாக வேண்டும். குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்” என ராயர் வலியுறுத்தினார்.
இது ஒட்டுமொத்த போலீஸையும் குற்றம் சொல்வதற்காகக் அல்ல…. நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கே என அவர் விளக்கினார்.
நவம்பர் 24-ஙாம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில் போலீஸைத் தாக்கிக் காயப்படுத்தியதாகக் கூறி அம்மூன்று இந்திய ஆடவர்களும் மலாக்கா போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் அச்சம்பவம் மீதான விசாரணையை தற்போது புக்கிக் அமான் போலீஸ் எடுத்துக் கொண்டுள்ளது.



