
கோலாலம்பூர், டிசம்பர்-10 – அண்மைய சபா சட்டமன்றத் தேர்தலில் படு தோல்வி கண்டதை தொடர்ந்து, அடுத்த 6 மாதங்களில் சீர்திருத்தங்கள் நடைபெறாவிட்டால், ஒற்றுமை அரசாங்கத்தில் தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டி வருமென DAP அறிவித்துள்ளது.
ஆனால், எந்த முடிவாக இருந்தாலும் மடானி அரசை DAP கவிழ்க்காது; அடுத்த பொது தேர்தல் வரை அதற்கான ஆதரவு தொடரும் என அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கூறினார்.
குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும், மறுபரிசீலனை என்றால் DAP அமைச்சரவைப் பதவிகளை விட்டு விலகிக் கொள்ளும்; ஆனால் வெளியிலிருந்து அரசுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் என்பதையே அந்தோணி லோக்கின் பேச்சு குறிக்கிறது.
மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க, வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல் அடுத்த 6 மாதங்களில் கண்கூடாக மாற்றங்கள் தெரிய வேண்டுமென்றார் அவர்.
இவ்வேளையில், அரசாங்கம் புதிய மொழிக் கொள்கையை தயாரித்து வரும் தகவலையும் அவர் வெளியிட்டார்.
இதில் UEC எனப்படும் சீன இடைநிலைப் பள்ளிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வு சான்றிதழுக்கு அங்கீகாரம் வழங்கும் முன்மொழிவும் அடங்கும் என்றார் அவர்.
அன்வாரின் நல்லாட்சி வெற்றிப் பெற வேண்டும் என்பதே DAP-யின் விருப்பம்; அதே சமயம் மக்கள் எதிர்பார்க்கும் சீர்திருத்தங்களும் விரைவுப்படுத்தப்பட வேண்டும் என அந்தோணி லோக் வலியுறுத்தினார்.
40 நாடாளுமன்றத் தொகுதிகளுடன், அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தில் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் DAP, சபாவில் போட்டியிட்ட 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் தோல்வியுற்றது.
எதிர்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறந்துவிட்டதாக எண்ணி, சீன வாக்காளர்கள் தங்களை நிராகரித்திருப்பதாக DAP கருதுகிறது.



