
ஈப்போ, ஜனவரி-6 – பேராக்கில் வேப் மற்றும் மின் சிகரெட் விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுக்கு, மாநில அரசின் தடை உத்தரவை முழுமையாக பின்பற்ற இவ்வாண்டு அக்டோபர் மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மனிதவளம், சுகாதாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு துறைகளுக்கான பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ A. Sivanesan இதனை அறிவித்துள்ளார்.
இன்னமும் செல்லுபடியாகும் உரிமம் கொண்ட வியாபாரிகள், தங்களிடம் உள்ள கையிருப்புகளை முடித்து, வியாபாரத்தை நிறுத்திக்கொள்ள இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதத்திற்குப் பிறகு தடையை மீறி விற்பனை மேற்கொண்டால், கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிவநேசன் எச்சரித்தார்.
பேராக்கில் வேப் விற்பனைக்கான தடை கடந்தாண்டு அக்டோபர் 1-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, இதன் அமுலாக்கம் இவ்வாண்டு ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கியது.
இந்நடவடிக்கை பொது சுகாதாரத்தை பாதுகாப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும் என்றார் அவர்.



