
கோலாலம்பூர், ஜனவரி 12 – Yayasan Akalbudi தொடர்பான வழக்கில், Ahmad Zahid Hamidi மீது இனி எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்ய முடியாது என்றும், இந்த வழக்கு முற்றிலும் முடிவுக்கு வந்ததென்றும் தலைமை சட்ட ஆலோசகரான Attorney-General Dusuki Mokthar தெரிவித்துள்ளார்.
2026 சட்ட ஆண்டின் தொடக்க நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், UMNO தலைவர் Zahid-டின் பாதுகாப்பு தரப்பு சமர்ப்பித்த ஆறு மனுக்களும், சம்பந்தப்பட்ட சட்ட மற்றும் உண்மை விவரங்களும் ஆராயப்பட்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார். குறிப்பாக, நிதி பரிவர்த்தனைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட மேல் விசாரணைகள், வழக்கின் தன்மையை மாற்றியதாக அவர் விளக்கினார்.
இந்த முடிவு தன்னிச்சையாக அல்லாமல், அரசியலமைப்பு வழங்கிய அதிகாரத்தின் அடிப்படையிலும், சட்டப்படி மேற்கொள்ளப்பட்ட முழுமையான ஆய்வுக்குப் பின்னருமே எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், உயர் நீதிமன்றம் முன்பு prima facie வழக்கு இருப்பதாக கூறியிருந்தாலும், கடந்த காலங்களில் மேல்முறையீட்டு நீதிமன்ற நிலை வரை சென்ற வழக்குகளும் மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளன என அவர் நினைவூட்டினார்.
முன்னதாக, 2013 முதல் 2018 வரை உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில், Yayasan Akalbudi மூலம் பல மில்லியன் ரிங்கிட் நிதி மோசடி மற்றும் லஞ்சம் பெற்றதாக Zahid மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால், மேல் விசாரணைகளுக்குப் பிறகு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கண்டறியப்பட்டதால், இந்த நீண்டநாள் வழக்கு முழுமையாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அட்டார்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.



