
சிலாங்கூர், ஜனவரி-13- இவ்வாண்டு கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவின் போது சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சுமார் 60 ஆலயங்களுக்கு 5 லட்சம் ரிங்கிட் மானியம் வழங்கப்படவிருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு தெரிவித்தார்.
இவ்வாண்டு மாநில அளவிலான தைப்பூச கொண்டாட்டத்தில் சமூக நலனுக்கும், சமூக மேம்பாட்டிற்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையில் தகுதி பெற்ற ஆலயங்களுக்கு முதல் கட்ட மானியத்திற்கான காசோலைகள் வழங்கப்படவுள்ளன. இம்முயற்சி இஸ்லாமிய அல்லாத வழிபாட்டு தலங்களின் நலனிலும், வசதி மேம்பாட்டிலும் மாநில அரசின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.
தைப்பூசத்திற்கு முதல் நாள் இரவு மாநில அரசின் ஏற்பாட்டில் பத்துமலையில் நடைபெறவிருக்கும் சிறப்பு கலை நிகழ்ச்சியில் ஒரு பகுதி ஆலயங்களுக்கு மானியம் வழங்கப்படவிருப்பதாகவும் இதனையடுத்து அன்றிரவு 10.00 மணிக்கு மேல் கெர்லிங் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் நடைபெறவிருக்கும் சிறப்பு கலை நிகழ்ச்சியில் மேலும் சில ஆலயங்களுக்கு மானியங்கள் வழங்கப்படவிருக்கிறது.
தொடர்ந்து தைப்பூச தினத்தன்று காலை 10.00 மணியளவில் கோலசிலாங்கூர் 2 1/2 மைல் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் அந்த வட்டாரா ஆலயங்களுக்கும் நிதியுதவி வழங்கப்படவிருக்கும் அதே வேளையில் பிற்பகல் 1.00 மணியளவில் பந்திங் தெலுக் டத்தோ ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பந்திங் வட்டாரத்தில் உள்ள சில ஆலயங்களுக்கு மானியங்கள் வழங்கப்படவிருக்கிறது.
இதனிடையே தைப்பூச விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் சமய நெறிகளை முறையாக கடைபிடிப்பதோடு அதிகார தரப்பினரும், அமலாக்கப் பிரிவினர் வழங்கும் ஆலோசனைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றுமாறு பாப்பா ராய்டு கேட்டுக் கொண்டார்.



