
கோலாலம்பூர், ஜனவரி-18-DAP-யின் நிழலைப் பார்த்து அம்னோ ஒருபோதும் பயப்பட வேண்டியதில்லை என அதன் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி கூறியுள்ளார்.
DAP-யை விட, மலாய்க்காரர்கள் பல பிரிவுகளாகப் பிளவுப் பட்டு கிடப்பதே ஆபத்து என்றார் அவர்.
அம்னோ பல காலமாகவே MCA, GERAKAN போன்ற மலாய் அல்லாத கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டுள்ளது.
DAP-யும் அதுபோலத்தான்; எனவே ஒற்றுமை அரசாங்கத்தில் DAP-யுடன் இணைந்து செயல்படுவதில் பயப்பட வேண்டியதில்லை என, அம்னோ பொதுப் பேரவையின் கடைசி நாளான நேற்று பேராளர்களின் விவாதங்களுக்குப் பதிலளித்து உரையாற்றிய போது அவர் சொன்னார்.
அம்னோ பொதுப் பேரவையில் DAP-க்கு எதிரான குரல்கள் வலுவாக ஒலித்த நிலையில், ஜொஹாரி சற்றி மாறுபட்ட இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
பெரும்பான்மையினரான மலாய்க்காரர்கள் பிளவுப் பட்டால், நாட்டின் நிலைத்தன்மையே ஆபத்தில் சிக்கும்.
அரசியல் என்பது கால்பந்து போல, அதாவது அனைவரும் தங்கள் பங்கை ஆடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என, மலாய்க்காரர்களின் ஒற்றுமையின் அவசியத்தை ஜொஹாரி உவமைப்படுத்தினார்.



