
கோலாலம்பூர், ஜனவரி 23 – முன்னாள் ராணுவ படை தலைவர் Tan Sri Mohd Nizam Jaafar மீது, 3.75 மில்லியன் ரிங்கிட் தொகையை உள்ளடக்கிய நான்கு ஊழல் குற்றச்சாட்டுகள் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன.
நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டபோது அவர் தனது குற்றச்சாட்டுகளை நீதிபதியின் முன்னிலையில் முற்றிலுமாக மறுத்தார்.
கடந்த ஆண்டு நோன்பு பண்டிகை பரிசுப் பொருட்கள் விநியோக ஒப்பந்தங்களில், தனது பதவியைத் தவறாக பயன்படுத்தி தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியதன் மூலம் 552,481.90 ரிங்கிட்டை பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 3.5 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகம் என கூறப்படுகிறது.
மேலும், ராணுவ படையின் நல நிதியின் 3 மில்லியன் ரிங்கிட் தொகையை அனுமதியின்றி முதலீடு செய்ததாக நம்பிக்கை மீறல் குற்றமும், ஒரு தனியார் நிறுவன இயக்குநரிடமிருந்து 200,000 ரிங்கிட் பணத்தை காரணமின்றி பெற்றதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
விசாரணை முடிவடையும் வரை, அவருக்கு 180,000 ரிங்கிட் ஜாமீன் தொகை விதிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை மார்ச் 31 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.



