
கோலாலம்பூர், ஜனவரி 27 – தேசிய இருதய நிறுவனமான IJN- இல் 22 நாட்கள் மருத்துவ சிகிச்சை பெற்ற முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், இன்று முதல் முறையாக பொதுவெளியில் தோன்றினார்.
100 வயதான டாக்டர் மகாதீர், Pavilion Damansara வணிக வளாகத்தில் உள்ள cafe-இல், சக்கர நாற்காலியில் அமர்ந்து சுமார் 40 நிமிடங்கள் செலவழித்தார். அவருடன் அவரது மனைவி துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலி, IJN தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இதர மருத்துவர்கள் உடன் இருந்தனர்.
மருத்துவர்களின் கண்காணிப்புடன் மகாதீர் வெளியே நேரம் செலவழித்தது, அவரது உடல்நிலை மீட்பில் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
இருப்பினும், அவர் இன்னும் முழுமையாக குணமடையாததால், வீட்டிற்கு திரும்ப அனுமதிக்கப்படாமல், தொடர்ந்து IJN மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். அவரைச் சந்திக்கும் அனுமதி, குடும்பத்தினருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதும் மருத்துவப் பின்னணியும் காரணமாக, டாக்டர் மகாதீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி மலேசியர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருந்தாலும், இன்று அவர் பொதுவில் தோன்றியது, பலருக்கும் நிம்மதியை அளித்துள்ளது.



