
டாமான்சாரா, ஜனவரி-30 – பெர்சாத்து தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் வீட்டில் பெரிக்காத்தான் நேஷனல் (PN) தலைவர்களின் நேற்றையக் கூட்டத்தில் பாஸ் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் பங்கேற்காதது கவனத்தை ஈர்த்துள்ளது.
அக்கூட்டத்தில் கெராக்கான் தலைவர் டத்தோ டோமினிக் லோவ், MIPP தலைவர் பி. புனிதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரவு 7 மணியிலிருந்தே பத்திரிகையாளர்கள் முஹிடின் வீட்டுக்கு வெளியே குழுமியிருந்த நிலையில், சுமார் 3 மணி நேரங்களுக்கு அச்சந்திப்பு நடைபெற்றது.
புனிதன் கூட்டத்திற்குப் பிறகு, “அனைத்தும் நன்றாக உள்ளது, PN வலுவாக உள்ளது, GE16-க்கு தயாராக உள்ளது.. ஆட்சியமைக்கக் காத்திருக்கும் அரசாங்கம் நாங்கள்” என்று ஊடகங்களிடம் பேசினார்.
முக்கிய உறுப்புக் கட்சியான பாஸ் பங்கேற்காதது குறித்து கேட்டபோது, அது ஒரு பிரச்னை அல்ல, பிறகு அக்கட்சியுயுயன் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என புனிதன் சொன்னார்.
சகோதரர்கள் இடையே இதெல்லாம் சகஜம் எனவும், பெரிக்காத்தான் ஒற்றுமையாகவும் வலுவாகவும் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், அரசியல் வட்டாரங்களில் பேச்சு வேறாக உள்ளது…
ஹாடி அவாங் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதோடு, எந்த பிரதிநிதியையும் அனுப்பாதது, ஒருவேளை பாஸ் பெரிக்காத்தானிலிருந்து விலகத் திட்டமிடுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
அது நடந்தால், அடுத்தப் பொதுத் தேர்தலில் பாஸ் தனித்தே நிற்குமா அல்லது அம்னோவுடன் கைக்கோர்க்குமா என்பது பற்றியும் யூகங்கள் கிளம்பியுள்ளன.
பெர்லிஸ் அரசியல் நெருக்கடியால் குறிப்பாக மந்திரி பெசார் பதவி பாஸ் கையிலிருந்து பெர்சாத்துவுக்கு மாறியதிலிருந்து அவ்விரு கட்சிகளுக்கும் இடையில் உறவு கசந்துள்ளது.
போதாக்குறைக்கு, பெரிக்காத்தான் தலைமை அமைப்பை மாற்றும் உத்தேசத் திட்டம் அடங்கிய கடிதம் கசிந்ததும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாக இருப்பது போல் வெளியில் காட்டிக் கொண்டாலும், பாஸ் கட்சியின் ‘மௌனம்’ கூட்டணியின் எதிர்காலம் குறித்து கேள்விகளைத் தூண்டுகிறது…



