
கோலாலம்பூர், பிப்ரவரி-28-அரசாங்கத்தைத் கவிழ்க்கும் சதித் திட்டத்துடன் தம்மை இணைத்து செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படும் போலீஸ் புகார் குறித்து, முன்னாள் நிதியமைச்சர் மறைந்த துன் டாய்ம் சைனுடினின் மனைவி தோ புவான் நைமா அப்துல் காலிட் அதிர்ச்சி தெரிவித்தார்.
இக்குற்றச்சாட்டுகள் “பொய்யானவை மற்றும் அர்த்தமற்றவை” என்றார் அவர்.
தாம் எவ்வித அரசியல் சதி நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இப்புகார், கடந்தாண்டு ஜூலையில் நைமா அமைத்த தகவல் தொடர்பு குழுவின் முன்னாள் உறுப்பினரால் அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்நபர், உண்மையில் குறைந்த செயல்திறன் காரணமாக பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், பின்னர் பணம் கேட்டு நச்சரித்ததாகவும் நைமா விளக்கினார்.
அதனை வஞ்சம் வைத்தே தற்போது இப்புகார் செய்யப்பட்டுள்ளதாக தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார்.
ஒரு முக்கியப் புள்ளியின் குடும்பம், இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட ஊடக ஆலோசக நிறுவனத்தை பயன்படுத்தி மலேசிய அரசாங்கத்தை நிலைகுலையச் செய்ய முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரித்து வருவதாக, தேசியப் போலீஸ் தலைவர் முன்னதாகக் கூறியிருந்தார்.
ஆனால், அதில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், குற்றச்சாட்டுகள் சிரிப்பூட்டுவதாகவும் நைமா கூறுகிறார்.



