
கோலாலம்பூர், ஜூலை.15-காவல் துறையின் பெயர், சின்னம் மற்றும் அதிகாரிகளின் படங்களை அனுமதியின்றி விளம்பரம், சந்தைப்படுத்தல் அல்லது வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் தரப்பினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய காவல் படைத் தலைவர் Tan Sri Mohamad Khalid Ismail அவ்வாறு எச்சரித்திருக்கிறார். அவ்வாறு செய்வதைக் கடுமையான ஒன்றாகக் கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், காவல்துறையின் அதிகாரப்பூர்வ அடையாளம் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு நிறுவனச் சொத்து. அது இலாபத்திற்காகவோ அல்லது காவல்துறையின் அங்கீகாரம் இருப்பது போன்ற ஒரு தவறான எண்ணத்தை உருவாக்குவதற்காகவோ பயன்படுத்தப்படக்கூடாது எனக் கூறினார்.
அதோடு காவல் துறை அதிகாரிகள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை, எந்தவொரு தயாரிப்பு, சேவை, முதலீடு அல்லது வணிகச் செயல்பாட்டிற்கான அங்கீகாரம் அல்லது ஆதரவு என அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
காவல்துறையின் அதிகாரப்பூர்வ அடையாளத்தை சட்டவிரோதமாகவோ அல்லது காவல்துறையின் அங்கீகாரம் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையிலோ பயன்படுத்தும் தரப்புகள், உரிய சட்டங்களின் கீழ் விசாரணை மற்றும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் Khalid Ismail எச்சரித்தார்.
காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்வதில் Bukit Aman மிகுந்த கடப்பாடு கொண்டுள்ளது என்றாரவர்.



