
குவாலா பிலா, ஜூலை-15-நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான 36 வேட்பாளர்களை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அறிவித்துள்ளது.
நேற்றிரவு PH தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குவாலா பிலாவில் அதனை அறிவித்தார்.
அவ்வகையில், வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில், பக்காத்தானின் _poster boy_ எனப்படும் மந்திரி பெசார் வேட்பாளர் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண் சிக்காமாட் (Sikamat) தொகுதியிலிருந்து மாறி லிங்கி (Linggi) தொகுதியில் போட்டியிடுகிறார்.
சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினரும் போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக், தனது சென்னா (Chennah) தொகுதியைத் தற்காக்கிறார்.
கணிசமான இந்திய வேட்பாளர்களும் இம்முறை களமிறக்கப்பட்டுள்ளனர்.
ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் ஜம்புநாதன், மீண்டும் நீலாயில் போட்டியிடுகிறார்.
எஸ். வீரப்பன் ரெப்பாவில் களமிறங்கும் வேளை, ஜெராம் பாடாங் தொகுதியில் G. மணிவண்ணன் போட்டியிடுகிறார்.
சிரம்பான் ஜெயாவில் எஸ். முகுந்தனும், ஸ்ரீ தஞ்சோங் தொகுதியில் Dr ராஜசேகரன் குணசேகரனும் களத்தில் குதித்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வரும் சனிக்கிழமை ஜூலை 18-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது.
ஜூலை 28-ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிக்கும் நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் தேர்தலில் பாரிசான் நேஷனலிடம் படுதோல்வி கண்ட நிலையில், நெகிரியில் அதிலிருந்து மீண்டு, வெற்றிப் பெறும் வேட்கையுடன் பக்காத்தான் களமிறங்குகிறது.



