
கோலாலம்பூர், ஜூலை-15-இந்து மத நிந்தனை மற்றும் புனிதப் பொருளை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சமூக ஆர்வலர் தமீம் தஹ்ரி அப்துல் ரசாக்கைத் (Tamim Dahri Abdul Razak) தேட, தேசியப் போலீஸ் படை அனைத்துலகப் போலீஸான Interpol அமைப்பிடம் ‘சிவப்பு நோட்டீஸ்’ (Red Notice) கோரியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் லங்காவி நீதிமன்றத்தில் தமீம் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவிருந்த நிலையில், அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார்.
அங்கிருந்தே வீடியோ வெளியிட்டு, நாடு திரும்ப சில நிபந்தனைகள் இருப்பதாகவும் அவர் கூறிக் கொண்டார்.
இந்நிலையில், அவரை நீதிமன்றத்தில் குற்றம் சாட்ட ஏதுவாக தாயகம் கொண்டு வர அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில், தமீம் மீது இதுவரை 192 போலீஸ் புகார்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த மே 17-ஆம் தேதி லங்காவி மேஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்குக் கைது ஆணைப் பிறப்பித்ததாகவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, ஜூன் 8-ஆம் தேதி Interpol-லிடம் சிவப்பு நோட்டீஸுக்கு PDRM விண்ணப்பித்தது.
தமீமை கருப்புப் பட்டியலிட்டிருப்பதோடு, அவரின் கடப்பிதழை இரத்து செய்யவும் PDRM கோரியுள்ளதாக அமைச்சர் சொன்னார்.
அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறப்படும் ஆலயங்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்து, ஆட்களைத் திரட்டியவரான தமீம், லங்காவியில் இந்துக்களின் புனிதச் சின்னங்களில் ஒன்றான திரிசூலத்தை காலால் மிதித்து பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
எனினும், பின்னர் அது திரிசூலம் என தமக்குத் தெரியாது என்றும், ஏதோ துருப்பிடித்த இரும்புக் கம்பி என்றே தாம் நினைத்ததாகவும் அவர் கூறிக் கொண்டார்.



