
கோத்தா கினபாலு, ஜூலை 14 – சபா பெனாம்பாங் (Penampang) பகுதியிலுள்ள பிரபல சினுண்டு மலை (Sinundu Hill) ஏற்றப் பாதையில் அமைந்துள்ள தேவாலயம் அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
சிலுவை, அன்னை மரியா சிலை, நடைபாதை முழுவதும் அமைக்கப்பட்டிருந்த சிறிய சிலுவைகள் உள்ளிட்ட பல மதச் சின்னங்கள் உடைக்கப்பட்டும், கீழே தள்ளப்பட்டும் இருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் முன்வந்து போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸ் புகார் பெறப்பட்டுள்ளதாக பெனாம்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிதெண்டன் சாமி நியூட்டன் (Superintendent Sammy Newton) தெரிவித்தார். மேலும், விசாரணை முன்னேற்றம் குறித்து விரைவில் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
சினுண்டு மலை உச்சியில் அமைந்துள்ள இந்தப் பிரார்த்தனைத் தலம், மலையேற்றம் மேற்கொள்ளும் கிறிஸ்துவர்கள் சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமன நேரங்களில் தியானம் மற்றும் பிரார்த்தனை செய்வதற்காக அடிக்கடி பயன்படுத்தப்படும் அமைதியான இடமாகும்.



