
ஜோகூர் பாரு, ஜூலை-14-ஜோகூர் மற்றும் மலேசியாவின் சட்டம், இறையாண்மை மற்றும் நலன்களுக்கு எதிரான சித்தாந்தங்களைப் பரப்ப ஒரு தளமாக ஜோகூர் மாநிலத்தைப் பயன்படுத்துவதற்கு, எந்தவோர் அமைப்புக்கும் அனுமதி அளிக்கப்படாது.
ஜோகூர் மந்திரி பெசார் Datuk Onn Hafiz Ghazi அவ்வாறு திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். Forest Cityயில் உள்ள, இணைந்து வாழும் மற்றும் இணைந்து பணியாற்றும் சமூகமான ‘Network School’ குறித்த கவலைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, அவர் அவ்வாறு சொன்னார்.
மலேசியாவிற்குள் நுழையத் தடை செய்யப்பட்ட இஸ்ரேலியர்கள், அந்த சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதாகவும், அவர்கள் இரண்டாவது கடப்பிதழ்களைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
Network Schoolலில் சம்பந்தப்பட்டவர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்களின் நாடுகள் குறித்து விசாரிக்குமாறு உள்துறை அமைச்சு, குடிநுழைவுத் துறை, காவல்துறை மற்றும் சுங்கத் துறையைத் தாம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் Onn Hafiz தெரிவித்தார்.
மாநில அளவில், உரிமங்கள், நிலப் பயன்பாட்டு நிபந்தனைகள், கட்டிட விதிமுறைகள், தங்குமிட விதிகள், வணிக நடவடிக்கைகள் ஆகியவை பின்பற்றப்படுகிறதா என்பதை Iskandar Puteri நகராண்மைக் கழகம், ஜோகூர் மாநில நிலம் மற்றும் சுரங்க அலுவலகம் மறு ஆய்வு செய்யும்.
விசாரணைகளில் சட்ட மீறல்கள், குடிவரவு அனுமதிச் சீட்டுகளின் தவறான பயன்பாடு, உரிமம் அல்லது நில நிபந்தனைகளின் மீறல்கள், அல்லது ஜோகூரின் நலன்களுக்கோ அல்லது தேசியப் பாதுகாப்பிற்கோ ஆபத்தை விளைவிக்கக்கூடிய எந்தவோர் அம்சமும் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் Onn Hafiz வலியுறுத்தினார்.
Network School தொடர்பில் ஏற்கனவே சில விவகாரங்கள் பேசப்பட்டு வருகிறது. இதனிடையே Forest City விரைவில் அறிக்கையொன்றை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



