
கோலாலம்பூர், மார்ச்-2-16-ஆவது பொதுத் தேர்தலில், புத்ராஜெயாவை முன்னின்று வழிநடத்தும் நோக்கில், தேசிய முன்னணி கூட்டணி குறைந்தது 115 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடத் தயாராகி வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
புத்ராஜெயாவில் துணைப் பிரதமரின் அதிகாரப்பூர்வ ஸ்ரீ சத்ரியா இல்லத்தில் நடைபெற்ற இரகசியக் கூட்டத்தில், BN தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி அவ்விருப்பத்தை வெளிப்படுத்தியதாக மலேசியா கினி செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தில், பக்காத்தான் ஹராப்பானுக்கு அடுத்த நிலையிலேயே BN பார்க்கப்படுவது குறித்த கண்ணோட்டத்தை மாற்றுவது அவசியம் என அவர் வலியுறுத்தினாராம்.
எனவே, BN குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டால், அது கூட்டணியின் பலவீனத்தை வெளிப்படுத்தும் என்றும் அவர் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
மாறாக, குறைந்தது 115 தொகுதிகளில் போட்டியிட்டால், BN அதிக இடங்களை வென்று, மத்திய அரசை வழிநடத்தும் வாய்ப்பை அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுநாள் வரை தனித்து போட்டியில்லை என்றும், ஒற்றுமை அரசாங்கக் கூட்டணியாகத் தான் போட்டியிடுவோம் என்றும் கூறி வந்த சாஹிட், தற்போது 115 தொகுதிகளுக்குக் குறி வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
தேசிய முன்னணி தனித்து நின்றால் மட்டுமே இது சாத்தியமாகும்.
ஒருவேளை கூட்டணியாகப் போட்டியிட்டால் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் இவ்வளவுத் தொகுதிகளை BN-னுக்கு விட்டுத் தருமா என்பதும் பெரியக் கேள்விக் குறியே…



