
நீலாய், மார்ச்-20-நிர்வாணா ஆசியா குழுமம், அதன் நினைவுக் கல்லறைகளில் இருந்து திருடப்பட்ட அஸ்தி கலசங்கள் மீட்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது அவை சரிபார்ப்பு மற்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன; அது முடிந்த கையோடு மிக கவனமாக அவை மீண்டும் அதே இடங்களில் நிறுவப்படும் என, இறுதிச் சடங்கு சேவைகளை வழங்கும் அந்நிறுவனம் கூறியது.
இந்த திருட்டுகள் திட்டமிட்ட முறையில் நடந்ததாகவும், குற்றச்செயல் கும்பல்களுடன் தொடர்புடையவை என்றும் போலீஸ் விசாரணைகள் தெரிவிக்கின்றன.
ஹோங் கோங், தென் கொரியா போன்ற நாடுகளிலும் இத்திருட்டு நிகழ்ந்திருப்பதை போலீஸ் சுட்டிக் காட்டியது.
இம்மாதத் தொடக்கத்தில் நெகிரி செம்பிலான் நீலாயில் உள்ள நிர்வாணா நினைவுப் பூங்காவில் 30 அஸ்தி கலசங்கள் திருடப்பட்டன; ஜோகூர் கூலாயில் மேலும் 20 அஸ்தி கலசங்கள் காணாமல் போயின.
திருடப்பட்ட அஸ்தி கலன்களைத் திருப்பித் தர, அனைத்துலக அழைப்பின் மூலம் பேரம் பேசப்பட்டதாகவும் கல்லறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு, போலீஸ் விசாரணைக்கும் நிர்வாணா குழுமம் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
ஆசியா முழுவதும் இறுதி சடங்கு நிறுவனங்களை குறிவைத்து நடக்கும் புதுவகையான இந்த குற்றச்செயல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.



