
புத்ராஜெயா, ஏப்ரல்-1,மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி மீதான விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வேண்டுமென்றே தாமதப்படுத்தினார் என்ற Bloomberg செய்தியை அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
தனியார் நிறுவனத்தில் அசாம் பாக்கி பங்கு வைத்திருப்பதாக எழுந்த புகாரை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்ட நிலையில், விசாரணை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்யுமாறு பிரதமர் உத்தரவிட்டதாக Bloomberg செய்தி வெளியிட்டுள்ளது.
இது, அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வியை எழுப்பியது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும் ஆதாரமற்றவை என்றும் அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் தெரிவித்தார்.
விசாரணை அறிக்கை மார்ச் 11-ஆம் தேதியே அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு விட்டது என்றும், தற்போது அது முறையான ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
இவ்விசரணையில், அனைத்து செயல்முறைகளும் விதிமுறைகளுக்கு உட்பட்டே நடைபெறுகின்றன என்றும், பிரதமரின் எந்த தலையீடும் இல்லை என்றும் ஷம்சுல் அஸ்ரி தெளிவுப்படுத்தினார்.
இவ்வேளையில், அச்செய்தியை வெளியிட்டதற்காக Bloomberg மீது சட்ட நடவடிக்கை எடுக்க தேசிய சட்டத்துறை பரிசீலித்து வருவதையும் அவர் உறுதிப்படுத்தினார்.



