
கோலாலாம்பூர், ஏப்ரல்-4-மலேசிய கபடி வீரர்களின் திறமையை வெளிப்படுத்தும் முக்கிய மேடையாக, கோலாலம்பூர், கெப்போங்கில் அண்மையில் ‘ராவணா கபடி கிண்ணம் 1.0’ போட்டி நடைபெற்றது.
இதனை Golden Kingdom (M) Sdn. Bhd., Kelab Sukan Kebajikan dan Rekreasi Negeri Sembilan மற்றும் Black Panthers கபடி கிளப் இணைந்து நடத்தின.

போட்டியின் இயக்குநராக Black Panthers தலைவர் Hiswaran A/L Subramannian செயல்பட்டார்.
ம.இ.கா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் நிகழ்ச்சிக்குத் தலைமைத் தாங்கி, போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

சிலாங்கூர் பிபிபி தலைவர் Dr சுரேந்திரன் முனியாண்டி, கோம்பாக் மாவட்ட இளைஞர் -விளையாட்டுத் துறை அதிகாரி நரேஸ் குமார் தங்கையா, செலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினர் தனபால் கிருஷ்ணன் ஆகியோருடன், முருகன் பெனோ @ வினோத், சந்துரு, கிருஷ்ணமூர்த்தி, யுவராஜா குப்புசாமி உள்ளிட்ட பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டனர்.
நாடளாவிய நிலையில் 16 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், சாம்பியனாக Black Panthers A அணி வாகை சூடி, RM3,000 ரொக்கம், பதக்கம் மற்றும் வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றது.

இரண்டாவது இடத்தைப் பிடித்த Red Giants A அணி, RM1200 ரொக்கம், பதக்கம் மற்றும் கோப்பையை வென்றது.
மூன்றாவது இடத்தை வென்ற Klangstarz அணிக்கு RM800 ரொக்கம், பதக்கம், கோப்பை வழங்கப்பட்டன.
நான்காமிடத்தை Soldadu பிடித்தது.
சிறப்பு விருதுகளாக, சிறந்த பாதுகாவலர், சிறந்த ரெய்டர், சிறந்த வீரர் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.

வெற்றியாளர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கிய டத்தோ ஸ்ரீ எம். சரவணன், நமது பாரம்பரிய விளையாட்டை மறக்காமல், அடுத்தத் தலைமுறைக்கும் விட்டுச் செல்லும் வகையில் இப்போட்டி அமைந்திருந்ததாக வணக்கம் மலேசியாவிடம் கூறினா*ர்.
முதன் முறையாக நடத்தப்படும் போட்டிக்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பது உத்வேகத்தைத் தருவதாக, ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த Dashvenan Letchumanan கூறினார்.

திறமை, உற்சாகம் மற்றும் வெற்றியின் மேடையாக அமைந்த இந்த ‘ராவணா கபடி கிண்ணம் 1.0’, மலேசிய கபடி விளையாட்டின் வளர்ச்சிக்கு புதிய ஊக்கத்தை அளித்தது.



