Latestமலேசியா

கோத்தா டாமான்சாரா தரவு மைய விவகாரம் அமைச்சரவைக்குக் கொண்டுச் செல்லப்படும் – ரமணன் அறிவிப்பு

சுங்கை பூலோ, ஜூலை-18 – கோத்தா டாமான்சாராவில் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் அமைக்கப்படவிருக்கும் தரவு மையத் திட்டம் குறித்த விவகாரம், அமைச்சரவைக் கூட்டத்திற்குக் கொண்டுச் செல்லப்படும் என, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

​உள்ளூர் மக்களின் கவலைகளைத் தீர்ப்பதற்காகவும், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் தரவு மையங்களை அமைப்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

​நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளைத் தாம் எதிர்க்கவில்லை என்றும், ஆனால் இத்தகைய பெரியத் திட்டங்கள் முறையான ஆய்வுகள் மற்றும் மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகே செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், மனிதவள அமைச்சருமான அவர் வலியுறுத்தினார்.

​இந்தத் திட்டம் அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல், மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளைப் பாதிக்கும் என்று அவரது அலுவலகம் நடத்திய ஆரம்பகட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

​இந்தத் திட்டம் குறித்துத் தமக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும், எந்தவிதமான கலந்துரையாடல்களிலும் தமக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து பெட்டாலிங் ஜெயா மாநகர மன்றமான MBPJ-வுக்கு அதிகாரப்பூர்வ ஆட்சேப கடிதத்தையும் அவர் அனுப்பியுள்ளார்.

​மக்களின் நலன் கருதி, இத்திட்டத்திற்கு நியாயமான மற்றும் வெளிப்படையான தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து கண்காணிப்பேன் என்று ரமணன் உறுதியளித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!