
கோலாலாம்பூர், ஏப்ரல்-6-நாட்டில் நிலவி வரும் கடும் வெப்பம் மற்றும் வறட்சியைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் இன்று முதல் வியாழக்கிழமை வரை செயற்கை மழையைப் பொழிய வைக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
இந்த மேக விதைப்பு பணிகளை, மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறையான MET Malaysia, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனமான NADMA மற்றும் அரச மலேசிய ஆகாயப் படை இணைந்து மேற்கொள்கின்றன.
இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கமே, மழை அளவை அதிகரித்து, நீர்மட்டம் குறைந்து வரும் பகுதிகளில் நீர் விநியோகத்தை நிலைநிறுத்துவது என, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான அமைச்சர் டத்தோ ஸ்ரீ Arthur Joseph Kurup தெரிவித்தார்.
நாட்டின் வட மற்றும் தென் பகுதிகளில் வெப்பநிலை 37 பாகை செல்சியஸ் வரை அதிகரித்துள்ளதால், சில இடங்களில் வெப்ப அலை நிலையும் பதிவாகி வருகிறது.
இதனால், முக்கிய அணைகள் மற்றும் நீர்த் தேக்கங்களில் மழையை அதிகரிக்க இந்த மேக விதைப்பு நடவடிக்கையில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
இதற்கிடையில், பொது மக்கள் அதிக வெப்ப நேரங்களில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்து, போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், நீரை சிக்கனமாக பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



