
புத்ராஜெயா, ஜூலை-7 – டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பயன்படுத்தும் BMW 7 Series வாகனம், அரசாங்கம் புதிதாக வாங்கிய வாகனம் அல்ல என்றும், அது தற்காலிகமான பாதுகாப்பு ஏற்பாடு மட்டுமே என்றும் பிரதமர் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
இணையத்தில் பரவி வரும் தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த உயர் பாதுகாப்பு வாகனம் பிரதமருக்காக பிரத்தியேகமாக வாங்கப்படவில்லை என, பிரதமர் துறை மற்றும் அரசாங்கத்தின் அனைத்துலக விழா செயலகப் பிரிவான BIUPA குறிப்பிட்டுள்ளது.
மாறாக, இந்த வாகனம் ஏற்கனவே அரசாங்கத்தின் வசமுள்ள ஒரு சொத்து ஆகும்.
அதாவது, பொதுவாக மலேசியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்கள், அதிபர்கள் மற்றும் பிரதமர்களுக்குப் பயன்படுத்தப்படும் வாகனமாகும்.
பாதுகாப்பு மதிப்பீடுகள் மற்றும் அத்தியாவசிய பாதுகாப்பு காரணங்களுக்காகவே, பிரதமர் இந்த வாகனத்தைத் தற்காலிகமாகப் பயன்படுத்துவதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
அரசாங்கத்தின் நிதி மற்றும் வாகனங்கள் குறித்த பொது மக்களின் யூகங்களுக்கு இந்த விளக்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.



