
கோலாலம்பூர், ஏப் 6 -மலேசியாவிற்கு வருகை புரியும் 2026ஆம் ஆண்டு இயக்கம் அடுத்த ஆண்டுக்கும் நீட்டிக்கப்படவுள்ளது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, ஒப்புதலுக்காக அமைச்சரவைக்குக் கொண்டு செல்லப்படும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி கூறினார்
விளம்பர உத்திகளை வலுப்படுத்துவதில் மலேசியா ஆக்கப்பூர்வமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவும், நாட்டை ஒரு பாதுகாப்பான, நிலையான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த இடமாகக் காட்சிப்படுத்தவும், அத்துடன் மாறிவரும் சுற்றுலாப் பயண முறைகளிலிருந்து கிடைக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் பிப்ரவரி 28 ஆம்தேதியன்று வெடித்த மோதல் உட்பட, தற்போதைய நிகழ்வுகளையும் இந்த நடவடிக்கை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது.
இந்த அமைதியின்மை வட்டார நிலைத்தன்மையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய சுற்றுலாத் துறையையும் பாதித்துள்ளது என்று
ஸாஹிட் தெரிவித்தார்.
மேற்கு ஆசியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை 11 விழுக்காடு முதல் 27 விழுக்காடுவரை குறையக்கூடும் என்றும், அதன் விளைவாக வருவாயில் சரிவு ஏற்படும் என்றும் கணிப்புகள் காட்டுவதாகக் கூறினார்.
கடந்த ஆண்டு, மலேசியா 42 மில்லியன் சுற்றுப் பயணிகளை ஈர்த்ததோடு சுற்றுலா வருவாய் 291 பில்லியன் ரிங்கிட்டை எட்டியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.



