
கோலாலாம்பூர், ஏப்ரல்-22-மலாக்கா, டுரியான் துங்கால் பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கின் தற்போதைய நிலை குறித்து தேசிய சட்டத் துறைத் தலைவர் தெளிவான விளக்கமளிக்க வேண்டும் என DAP வலியுறுத்தியுள்ளது.
சுமார் 5 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், 3 இந்திய ஆடவர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அவர்களில் ஒருவர், செம்பனைத் தோட்டமொன்றில் அதிகாலை 4.30 மணிக்கு பாராங் கத்தியால் ஒரு போலீஸ்காரரைத் தாக்கிக் காயப்படுத்தியதால், தற்காப்புக்காக துப்பாக்கிச் சூட்டை நடத்த வேண்டியதாயிற்றாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
எனினும், அதனை மறுத்த குடும்பத்தார் மேல் விசாரணைக்கு வற்புறுத்தியதை அடுத்து, சிறப்புப் பணிக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
எனினும், இதுவரை உருப்படியாக எதுவும் நடைபெற்றதாக தெரியவில்லை என, DAP தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ அறிக்கையொன்றில் கூறினார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டியது அவசியம் என்றும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு சட்டத் துறைத் தலைவருக்கு உள்ளது என்றும் அவர் சொன்னார்.
இச்சம்பவம் கொலை வழக்காக மறுவகைப்படுத்தப்பட்டுள்ளதால், போலீசாரின் புலனாய்வு அறிக்கை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் தகவல்கள் பகிரப்பட வேண்டும் என, இலக்கவியல் அமைச்சருமான அவர் வலியுறுத்தினார்.



