
கோலாலாம்பூர், ஏப்ரல்-22-சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் அரச மன்னிப்புக் கோரி புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுவது தொடர்பில் கருத்துரைக்க, கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹானா இயோ மறுத்துள்ளார்.
அது பற்றி எதுவும் தமக்குத் தெரியாது என்பதால், எவ்வித கருத்தும் கூற விரும்பவில்லை என்றார் அவர்.
SRC International ஊழல் வழக்கில் காஜாங் சிறையிலிருக்கும் நஜீப், முடிந்த ரமலான் மாதத்தில் மீண்டும் ஒருமுறை அரச மன்னிப்பு கோரி விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது.
கூட்டரசு மன்னிப்பு வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட அம்மனுவின் ஒரு நகல் தேசிய அரண்மனையான இஸ்தானா நெகாராவுக்கும் அனுப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி FMT முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
அது குறித்தே ஹானா இயோவிடம் கேட்கப்பட்டது.
42 மில்லியன் ரிங்கிட் நிதி மோசடியை உட்படுத்திய SRC வழக்கில் நஜீப்புக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 210 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது.
பின்னர் மன்னிப்பு வாரியம் சிறைத் தண்டனையை ஆறாண்டுகளாகவும், அபராத்ததை 210 மில்லியனிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்டாகவும் குறைத்தது.
எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிக்கவும் நஜீப் சட்டப் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



