
கோலாலாம்பூர், ஏப்ரல்-23,உலகின் பரபரப்பான கடல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான மலாக்கா நீரிணை தொடர்பான எந்தவொரு முடிவும் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்படக்கூடாது.
வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஹசான் அதனை வலியுறுத்தியுள்ளார்.
இந்த நீரிணையின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் மலேசியா, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கூட்டுப் பொறுப்பு மற்றும் ஆலோசனைகள் மிக அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் வெளிநாடுகளின் உதவி வரவேற்கத்தக்கது என்றாலும், அது சம்பந்தப்பட்ட நாடுகளின் அனுமதியுடனும், அனைத்துலகச் சட்டங்களுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
வட்டார அமைதியைக் குலைக்கும் வகையிலான எந்தவொரு வெளிப்படையான ஆதிக்கத்தையும் அனுமதிக்க முடியாது என்றார் அவர்.
மலாக்கா நீரிணை வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய மலேசியா எப்போதும் முன்னுரிமை அளித்து வருவதாகவும், தொழில்நுட்பப் பகிர்வு மற்றும் கூட்டுப் பயிற்சிகள் மூலம் இதனை மேம்படுத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்கு ஆசியாவில் நீடித்துவரும் அரசியல் குழப்பத்தின் மத்தியில், மத்தியக் கிழக்கு போர் மலாக்கா நீரிணை உள்ளிட்ட உலக வர்த்தக பாதைகளில் புதிய அபாயங்களை உருவாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மொஹமட் ஹசான் இவ்வாறு கூறியுள்ளார்.



