
கோலாலம்பூர், ஏப் 27-தற்போது பல மாநிலங்களைப் பாதித்துள்ள வெப்பமான வானிலை ஜூன் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்பம் உச்சத்தில் இருக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட் மலேசியாவின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹஷாம் முகமட் அனிப் ( Mohd Hisham Mohd Anip )தெரிவித்தார்.
நாம் உச்சக்கட்ட வெப்ப காலத்தைக் கடந்துவிட்ட போதிலும், வெப்பநிலை இன்னும் அதிகமாகவே இருந்து, மக்களின் இயல்பான வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும் என்று அவர் இன்று கூறினார்.
தற்போது நிகழ்ந்து வரும் பருவமழை மாற்ற நிகழ்வானது தற்காலிக மழையை மட்டுமே கொண்டுவருகிறது என்றும், அதனால் ஒட்டுமொத்த வெப்பநிலையைக் குறைக்க இயலாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வானிலை பதிவுகளின்படி, வறட்சியின் உச்சம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இருக்கும், ஆனால் வெப்பமான வானிலை ஜூன் மாதம் வரை நீடிக்கலாம்.
பருவமழை மாற்றத்தின் போது, பொதுவாக மாலை அல்லது இரவு நேரங்களில், ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை மழை பெய்யும். இது வெப்பத்தை ஓரளவிற்கு குறைக்கக்கூடும், ஆனால் அதன் விளைவு தற்காலிகமானது மட்டுமே, நீண்ட காலம் நீடிக்காது என்று முகமட் ஹஷாம் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக, வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்து , போதுமான அளவு தண்ணீர் அருந்துவதை உறுதி செய்தல் மற்றும் குறிப்பாக ஆபத்தில் உள்ளவர்களின் உடல்நிலையைக் கண்காணித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்



