Latestமலேசியா

2030-க்குள் குறைந்தபட்ச சம்பளம் RM3,000 எட்ட மலேசியா இலக்கு – ரமணன் தகவல்

புக்கிட் ஜாலில், மே-1-நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர்கள் நியாயமான பங்கை பெற வேண்டும் என, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர், புக்கிட் ஜாலிலில் நடைபெற்ற தொழிலாளர் தின நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் வளர்ச்சிக்கும் சாதனைகளுக்கும் தொழிலாளர்களே முதுகெலும்பு என புகழாரம் சூட்டினார்.

மடானி அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்தங்கள், தொழிலாளர் சந்தையை வலுப்படுத்தியிருப்பதோடு, நாட்டின் போட்டித்தன்மையையும் மேம்படுத்தியுள்ளது.

குறிப்பாக மலேசியாவின் 5.2% பொருளாதார வளர்ச்சி, உலகப் போட்டித்தன்மை உயர்வு மற்றும் வேலையின்மை விகிதம் 2.9% ஆக குறைந்தது போன்ற முன்னேற்றங்களை அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், மகப்பேறு மற்றும் தந்தை விடுப்பு அதிகரிப்பு, வேலை நேரம் குறைப்பு, சமூகப் பாதுகாப்பு விரிவாக்கம் போன்ற தொழிலாளர் நல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் இன்னும் பலர் சிரமத்தில் இருப்பதாக ரமணன் ஒப்புக்கொண்டார்.

எனவே, வளர்ச்சி அனைவருக்கும் சமமாக சென்றடைய வேண்டும் என்றார் அவர்.

இதனிடையே, 2030-ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்ச ஊதியத்தை RM3,000 ஆக உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்காக உள்ளது.

13-ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் அம்முயற்சி முன்னெடுக்கப்படும்.

முதலாளிகள்-தொழிலாளர்கள் இடையிலான உறவில், ஒரு சாரார் மட்டுமே வளப்பத்தை அனுபவிப்பதும் இன்னொரு தரப்பு பின்தங்குவதையும் அனுமதிக்க முடியாது என்றார் அவர்.

நியாயமான ஊதியம், வலுவான பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாடு மூலமே நாட்டின் வளர்ச்சி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார்.

இந்த தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைத்தார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!