
கோலாலம்பூர், மே-25-இவ்வாண்டு ஜூன் 1 முதல் கடுமையான இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மலேசியா அறிமுகப்படுத்தவுள்ளது.
அதன்படி, சமூக ஊடகப் பயனர்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பயன்படுத்தித் தங்கள் வயதைச் சரிபார்க்க வேண்டும்.
மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தால் (MCMC) அறிமுகப்படுத்தப்பட்ட இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025-இன் கீழ் கொண்டுவரப்பட்ட புதிய விதிமுறைகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முக்கிய சமூக ஊடகச் சேவைகளில் கணக்குகளைத் தொடங்குவதைத் தடுப்பதை இந்தப் புதிய முறை நோக்கமாகக் கொண்டுள்ளது என 2026 ஆண்டின் ஸ்ரீ அங்காசா விருதுக்கு முன்மொழியப்படுவோருக்கான அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவங்கள் தொடர்பான விவரங்களை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தபோது தியோ நீ சிங் இத்தகவலை வெளியிட்டார்.
இதன்வழி சமூக ஊடகங்களை இளைஞர்கள் அணுகுவது தொடர்பான விதிமுறைகளைக் கடுமையாக்கும் நாடுகளின் பட்டியலில் மலேசியாவும் இணைந்துள்ளது.
இணையவழி பகடிவதை , இணையக் குற்றவாளிகள், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் சிறார்களின் மனநல பாதிப்புகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் கடுமையான டிஜிட்டல் பாதுகாப்புச் சட்டங்களை அதிகளவில் அறிமுகப்படுத்தி வருகின்றன.



