
டென் பசார், ஜூன் 11 – பாலி சுற்றுலாத் தீவிலிருந்து புறப்படவிருந்த ஒரு தனியார் விமானத்தின் கழிப்பறையில் மறைந்திருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தப்பியோடிய குற்றவாளியை இந்தோனேசிய அதிகாரிகள் கைது செய்தனர்.
சனிக்கிழமையன்று பாலியின் Denpasar விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து VIP முனையத்திற்குத் திரும்புமாறு விமானி உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் விமானத்திற்குள் விரைந்தனர்.
இந்தோனேசியாவிற்குள் நுழைந்ததற்கான எந்தப் பதிவும் அல்லது அந்நாட்டிற்கான செல்லுபடியாகும் வசிப்பிட அனுமதியும் இல்லாமல், பிரேசில் கடப்பிதழில் பயணம் செய்த நபர் மீது குடிநுழைவு அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டிருந்தது.
அந்த நபரும், மேலும் மூன்று வெளிநாட்டுப் பயணிகளும், மூன்று விமானப் பணியாளர்களும் பாலியின் தலைநகரிலிருந்து Mozambiqueகில் உள்ள மபுடோவிற்குப்( Maputo) புறப்படத் தயாராக இருந்தபோது, விமானத்தை ஓடுபாதையிலேயே காத்திருக்குமாறு விமானிக்கு அழைப்பு வந்தது.
விமானத்தின் உள்ளே மூன்று பயணிகளையும், கழிப்பறையில் ஒளிந்திருந்த சந்தேக நபரையும் அதிகாரிகள் கண்டுபிடித்ததாக பாலி குடிநுழைவு அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரித்தனர்.
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மற்றும் அனைத்துலக போலீசாரால் தேடப்படும் ஒரு மோட்டார் சைக்கிள் கும்பலின் முக்கிய உறுப்பினரான ஏஞ்சலி பாண்டெலோ (Angeli Pandelo) என்பவர்தான் அந்த நபர் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் அடையாளம் காட்டின.
கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக, அந்த
சந்தேக பேர்வழி வேறொருவரின் பிரேசில் கடப்பிதழை பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
55 வயதான அந்த நபர் பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் புதன்கிழமை இரவு இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தப்பட்டான்.



