கடத்தல் நாடகமா? ஜோகூரில் ‘கடத்தப்பட்ட’ பெண்ணும், கடத்தல்காரர் என கூறப்பட்டவரும் போலீசாரால் கைது

ஜோகூர் பாரு, ஜூன்-21,
ஜோகூர் பாருவில் 18,000 ரிங்கிட் பிணைத் தொகைக்காக கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட 20 வயது மதிக்கத்தக்க பெண்ணும், அவரது கூட்டாளியும் புக்கிட் அமான் போலீஸாரால் அதிரடியாகக் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
சரவாக்கைச் சேர்ந்த 43 வயது தாய், தனது மகள் கடத்தப்பட்டதாக அளித்த புகாரைத் தொடர்ந்து, புக்கிட் அமான் மற்றும் ஜோகூர் போலீஸ் கூட்டுப் படை நேற்று மதியம் Taman Perniagaan Sertia-வில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தியது.
அங்கு அப்பெண் மீட்கப்பட்டதோடு, போதைப்பொருள் பின்னணி கொண்ட 27 வயதுடைய உள்ளூர் ஆடவர் ஒருவரும் கைதுச் செய்யப்பட்டு, 4 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் அதனை உறுதிப்படுத்தினார்.
எனினும், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் வாக்குமூலத்தில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இருந்ததால், போலீஸார் அவர் மீதே சந்தேகமடைந்து அவரையும் கைதுச் செய்துள்ளனர்.
இது ஒரு திட்டமிடப்பட்ட நாடகமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
1961-ஆம் ஆண்டு கடத்தல் சட்டத்தின் கீழ் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ள வேளை, இந்தச் சம்பவத்தின் உண்மையான பின்னணியைக் கண்டறிய போலீஸார் இன்று நீதிமன்றத்தில் தடுப்புக்காவல் ஆணைக்கு விண்ணப்பிக்கவுள்ளனர்.



