Latestமலேசியா

ஜெலுத்தோங் சீனக் கோயிலில் இருவர் மீது பாராங் கத்தி தாக்குதல்; அறுவர் கைது

ஜோர்ஜ் டவுன் , ஜூன்-23 -ஜெலுத்தோங்கில் சீனக் கோயிலில் நடத்தப்பட்ட
பாராங் கத்தி தாக்குதலில் இருவர் கடுமையாக காயம் அடைந்த சம்பவம் தொடர்பில் அறுவர் கைது செய்யப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மணி 4.30 அளவில் அந்த சம்பவம் நிகழ்ந்ததாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ டென்னிஸ் லிம் குவாங் கெங் ( Dennis Lim Kwang Keng) தெரிவித்தார்.

அன்று அதிகாலை ஒரு இரவு விடுதியில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கும் ஒரு கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிதலே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

31 வயது நபர் ஒருவர் தனது கைதொலைபேசியை திருடியதாகச் சந்தேக நபர்களில் ஒருவர் குற்றஞ்சாட்டிய போதிலும் விசாரணையில் அது உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது.

அதன்பின்னர் அந்தக் கும்பல் 31 வயது நபரை பின்தொடர்ந்து கோயிலுக்குச் சென்று அங்கு ஆயுதங்களை ஏந்தியிருந்த ஏழு பேர் அவரைக் தாக்கியதாக இன்று மாநில போலீஸ் தலைமையகத்தில் Dennis Lim கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தனது ஆள்காட்டி விரலையும், மற்றொருவர் சுண்டு விரலையும் இழந்தனர். அவர்கள் இருவரும் வெட்டுக் காயத்திற்கு உள்ளான போதிலும் , அவர்கள் தற்போது சீராக உள்ளனர்.

அதே நாளில் 26 முதல் 38 வயதுக்குட்பட்ட ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டதோடு தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பாராங் கத்தி , ஆறு கைதொலைபேசிகள் , இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார், தலைக்கவசம், ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணைக்கு உதவும் பொருட்டு கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வழிகள் அனைவரும் , ஜூன் 28 ஆம் தேதிவரை வரை ஏழு நாட்களுக்கு தடுத்துவைக்கும் உத்தரவை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!