
பெட்டாலிங் ஜெயா, ஜூலை-1-வெளிநாட்டவர் ஒருவர் பொது இடத்தில் சிறுநீர் கழித்த சம்பவம் பொதுமக்களின் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ‘Threads’ சில் பகிரப்பட்ட 17 வினாடிகள் கொண்ட அச்சம்பவம் மீதான காணொளி வைரலாகியுள்ளது.
அந்தக் காணொளியில், டிடிவாங்சா (Titiwangsa) எம்ஆர்டி (MRT) நிலையத்தில் உள்ள மின் படிக்கட்டின் ஓரத்தில் அந்த நபர் சிறுநீர் கழிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தாம் வேலைக்குச் செல்லும் வழியில் இச்சம்பவத்தைக் கண்டதாகக் கூறி அந்தக் காணொளியை ஒருவர் வெளியிட்டுள்ளார். அக்காணொளி இணையவாசிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ‘அச்செயல் அருவருப்பானது, பொறுப்பற்றது மற்றும் பொது வசதிகளை அசுத்தப்படுத்தும் வகையில் உள்ளது’ என சிலர் விமர்சித்துள்ளனர்.
‘எம்ஆர்டி நிலையத்தில் சுத்தமான கழிவறைகள் உள்ளன. அதைப் பயன்படுத்துவதில் என்ன பிரச்சனை? அந்நபரின் செயல் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது’ என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அத்தகையச் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க பொதுப் போக்குவரத்து வளாகங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என வலைவாசிகள் சம்பந்தப்பட்ட தரப்புகளை வலியுறுத்தியுள்ளனர்.



