
கெப்பாளா பெத்தாஸ், ஜூலை-10-நாட்டில் இப்பருவத்தில் டுரியான் விலை கணிசமாகக் குறைந்திருந்தாலும், உயர் இரக ‘Black Thorn’ போன்ற டுரியான்களைத் திருடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
பினாங்கு, கெப்பாளா பாத்தாஸில் உள்ள ஒரு டுரியான் விற்பனை அங்காடியில் இருமுறை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
அங்கிருந்த மதிப்புமிக்க டுரியான்கள் திருடப்பட்டதோடு, ஒரு சம்பவத்தின் போது கொள்ளையன் கத்தியுடன் வந்ததும் தெரியவந்துள்ளது.
டுரியான் தோட்டங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.
சுங்கை ஆராவில் உள்ள விவசாயிகள், அதிகாலை நேரத்தில் திருடர்கள் கும்பலாக வந்து டுரியான்களைத் திருடிச் செல்வதாகக் கூறுகின்றனர்.
விவசாயிகள் ட்ரோன்களைப் பயன்படுத்தியும், காவல் நாய்களை வைத்தும் பாதுகாப்பை பலப்படுத்த முயன்றாலும், திருடர்களைப் பிடிப்பது சவாலாகவே உள்ளது.
இந்நிலையில், பினாங்கு பழ விவசாயிகள் சங்கம், டுரியான் திருடுவது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் செயல் என்றும், இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.



