
கோலாலாம்பூர், ஜூலை-15-ChatGPT, Claude, Gemini போன்ற AI செயலிகளின் அதிகப்படியான பயன்பாடு, மனித மூளையின் செயல்பாட்டைக் குறைத்து எதிர்காலத்தில் கடுமையான Dementia எனப்படும் மறதி நோய்க்கு வழிவகுக்கும் என, அனைத்துலக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தினசரி திட்டமிடல், எழுதுதல் மற்றும் எளிய சிந்தனைகளுக்குக் கூட மக்கள் முழுமையாக AI தளங்களைச் சார்ந்து வாழத் தொடங்குவதால், மனித மூளையின் அறிவாற்றல் திறன் மற்றும் முடிவெடுக்கும் ஆற்றல் படிப்படியாக மந்தமடைகின்றன.
வழக்கமாக மூளைக்கு வேலை கொடுக்கும் கணக்குகள், ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் போன்ற பயிற்சிகள் குறையும் போது, மூளையின் நரம்பியல் தொடர்புகள் பலவீனமடைந்து மறதி நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் கணிசமாக அதிகரிப்பதாக, நரம்பியல் வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
குறிப்பாக, வளர்ந்து வரும் இளையத் தலைமுறையினர் தங்களின் சுயசிந்தனையை விடுத்து, தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியிருப்பது அவர்களின் நீண்டகால மூளை ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என அஞ்சப்படுகிறது.
AI என்பது மனித வேலைகளை எளிதாக்கும் ஒரு துணைக் கருவியே தவிர, அதுவே மனித சிந்தனைக்கு மாற்றாக அமையக் கூடாது என்றும், தொழில்நுட்பப் பயன்பாட்டில் சுயக்கட்டுப்பாடும் நிதானமும் அவசியம் என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.



