Latestமலேசியா

குழந்தைகளுக்கான நேர்மைப் பயிற்சித் தொகுதி MIKa அறிமுகம்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-27–சிறு வயதிலேயே பிள்ளைகளிடம் நேர்மை மற்றும் ஒழுக்க விழுமியங்களை வளர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட குழந்தைகளுக்கான நேர்மைப் பயிற்சித் தொகுதி (MIKa) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாட்சிமை தங்கிய பேரரசியார் ராஜா ஸரித் சோபியா Bukit Cherasசில் உள்ள ஒற்றுமை மழலையர் பள்ளியில் அதனை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.

IIM எனும் மலேசிய ஒருமைப்பாட்டுக் கழகத்தின் முயற்சிகளை உருவாக்கப்பட்டுள்ள MIKa, 2 முதல் 6 வயது வரையிலான TASKA, TADIKA மற்றும் பாலர் பள்ளி குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. உண்மை பேசுதல், நேர்மை, நம்பகத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் பிறரை மதித்தல் போன்ற அடிப்படைப் பண்புகளை எளிதில் புரியும் வகையில் கதை, பாடல், நடிப்பு மற்றும் கலைச் செயல்பாடுகள் மூலம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது இதன் நோக்கமாகும்.

MIKa திட்டத்தின் நோக்கம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, இரண்டு பிரிவுகளை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது. அவை 2 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான குழந்தைப் பராமரிப்பு மையங்கள் (TASKA) மற்றும் 5 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான குழந்தைகள் கல்வி மையங்கள் (TADIKA) ஆகும். இவ்வாண்டு அக்டோபர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள MIKaவின் முன்னோடித் திட்டமாக மொத்தம் 50 TASKA மற்றும் TADIKA மையங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.

குழந்தைகளின் ஆரம்ப வயதிலேயே நேர்மை மற்றும் ஒழுக்கத்தை வளர்ப்பது எதிர்கால தலைமுறையை உருவாக்க முக்கியமானது என தேசிய ஒற்றுமை அமைச்சர் டத்தோ ஆரோன் ஆகோ டாகாங் தெரிவித்தார். நல்லொழுக்கம், நல்லிணக்கம் மற்றும் அனைவரின் வளமான வாழ்வையும் மதிக்கும் தலைமுறையை உருவாக்குவதில் நேர்மைக் கல்வியும் ஒருமைப்பாட்டுக் கல்வியும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

MIKa தொகுதியை உருவாக்கும் பணியில் தேசிய ஒற்றுமை அமைச்சு நேரடியாக ஈடுபட்டுள்ளதுடன், மலேசிய கல்வி அமைச்சு, சமூக நலத்துறை, சமூக மேம்பாட்டுத் துறை, சரவாக் பெண்கள், குழந்தைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு, சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகம் (UPSI), சிலாங்கூர் பல்கலைக்கழகம் (UNISEL) ஆகியவையும் இணைந்து செயல்படுகின்றன.

மலேசிய மழலையர் பள்ளிகள் சங்கம் (PTM), மலேசிய பதிவு செய்யப்பட்ட குழந்தைப் பராமரிப்பு மற்றும் ஆரம்பக் குழந்தைப் பருவ மேம்பாட்டுச் சங்கம் (PPBM), மலேசிய இஸ்லாமிய மழலையர் பள்ளிகள் சங்கம் (PERTIM) உள்ளிட்ட அரசு சாரா அமைப்புகளும் MIKa தொகுதியின் உருவாக்கத்தில் பங்களித்துள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!