
போர்ட் டிக்சன், செப்டம்பர் 3 – சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமைப் பகுதிகளை அதிகரித்தல் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட 1008 ‘Back 2 Nature’ மரம் நடும் நிகழ்ச்சி, சுங்கை மென்யாலா வனக் காப்பகத்தில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெற்றது.
காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசாங்க நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் உள்ளூர் சமூகங்களைச் சேர்ந்த சுமார் 250 பேர் பங்கேற்றனர். Social i-Tenaga அமைப்பு (SiTA), யோகாசன தவவன அமைப்பு, நெகிரி செம்பிலான் மாநில அரசு மற்றும் மாநில வனத்துறை இணைந்து இதனை ஏற்பாடு செய்தன.
UNITEN, MILA பல்கலைக்கழகம், APU, TNB அதாவது சிரம்பான் மின்சார இலகா மற்றும் போர்ட்டிக்சன் பணியாளர்களுடன், லாடாங் லின்சும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Malaysia Greening Programme 2.0-க்கு ஆதரவாக நடைபெற்ற இந்நிகழ்ச்சி, நெகிரி செம்பிலான் மாநிலம் 2030ஆம் ஆண்டுக்குள் 20 லட்சம் மரங்களை நடும் இலக்கை அடையவும் பங்களிக்கிறது. அதேவேளை, இளம் தலைமுறையினரிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொறுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பல்வேறு சமூகங்களிடையே ஒற்றுமையையும் வளர்க்கிறது.
சுதந்திர மாதக் கொண்டாட்டத்துடன் இணைந்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் கெமெஞ்சே சட்டமன்ற உறுப்பினருமான துவான் சுஹைமிசான் பின் பிசார் (Tuan Suhaimizan bin Bizar) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.



