
அம்பாங், செப்டம்பர் 3 – காரை ஓட்டிய 42 வயது உள்ளூர் ஆடவர், தவறுதலாக ஆக்சிலரேட்டரை மிதித்ததால், குடியிருப்பின் வாகன நிறுத்துமிடச் சுவரை மோதி கார் கீழ்தளத்தில் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில், வாகன நிறுத்துமிடத்தில் இருந்து காரை வெளியே எடுக்க முயன்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் கைருல் அனுவார் காலிட் (Asisten Komisioner Khairul Anuar Khalid ) தெரிவித்தார்.
கட்டுப்பாட்டை இழந்த கார், முன்பக்க கான்கிரீட் சுவரை மோதி கீழ்தளத்தில் விழுந்தது. மோதியதில் சுவர் இடிந்து, கீழ்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் ஐந்து வாகனங்கள் சேதமடைந்தன.
எனினும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. ஆரம்பகட்ட விசாரணையில், ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என தெரியவந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக அனைத்து தரப்பினரும் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.



