
கோலாலம்பூர், செப்டம்பர்-10,மலாய் அரசியல் ஒற்றுமைக் கூட்டணிக்கு, அம்னோவே தலைமைத் தாங்க வேண்டும் என்றும், அதே வேளையில் அனைத்து மக்களுக்குமான மிதமான அரசியல் பாதையை அம்னோ தொடர்ந்து உறுதிச் செய்யும் என்றும் அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
அம்னோ இளைஞர், மகளிர் மற்றும் புத்ரி பிரிவுகளுக்கான ஆண்டுப் பொதுக் கூட்டத்தை நேற்றிரவு தொடக்கி வைத்து பேசிய Tok Mat, மலாய்-முஸ்லீம் ஒற்றுமைக்கான முயற்சியில் அம்னோவே மையப் புள்ளியாக இருக்க வேண்டும் என்றார்.
கடந்த கால அனுபவங்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், இனி எந்தவோர் அரசியல் சூழலிலும் அம்னோ தங்களை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காது என எச்சரித்தார்.
அதே சமயம், அம்னோ எப்போதும் ஒரு நடுநிலையான, மிதமான கட்சி என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
மலேசியா அனைத்து மக்களுக்குமானது என சுட்டிக்காட்டிய அவர், மலாய்க்காரர் அல்லாத மக்களுக்கோ அல்லது சபா மற்றும் சரவாக் வாக்காளர்களுக்கோ எவ்வித அச்சத்தையும் ஏற்படுத்தாத வகையில் அம்னோவின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
அம்னோவுடன் இணையும் கூட்டணிக் கட்சிகள் தீவிரவாதக் கருத்துக்களைத் திணிக்காமல், அம்னோவின் இந்த நடுநிலைப் பாதையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
16-ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள அம்னோ இம்முறை பாஸ் கட்சியுடன் கைக்கோர்க்கலாம் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அக்கூட்டணிக்கு அம்னோவே தலைமையேற்கும் என்ற அர்த்தத்தில் தான் மொஹமட் ஹசான் பேசியிருப்பதாக இதன் மூலம் அறியமுடிகிறது.



