
கோலாலம்பூர், பிப்ரவரி-26 – AI செயற்கை நுண்ணறிவு திறனும் விழிப்புணர்வும் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டியது அவசியம்.
இல்லையேல் நாம் அனைவரும் இலக்கவியல் அசுர வளர்ச்சியில் பின்தங்கி விடுவோம் என, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நினைவுறுத்தியுள்ளார்.
இலக்கவியல் யுகம் ஏற்படுத்தும் பெரும் மாற்றத்தை எதிர்கொள்ள அனைவருமே தயாராக வேண்டுமென்றார் அவர்.
நாடாளுமன்ற வளாகத்தில் 2 நாட்களாக நடைபெற்று வரும் AI கண்காட்சியை பார்வையிட்ட பிறகு அவர் அவ்வாறு சொன்னார்.
மலேசிய மைக்ரோசோஃப்ட் நிறுவனம் இலக்கவியல் அமைச்சோடு இணைந்து, AI அலுவலகம் மற்றும் அரசு சாரா இயக்கத்தின் ஒத்துழைப்போடு இந்தக் கண்காட்சியை நடத்தியது.
வரும் காலத்தில், 8 லட்சம் மலேசியர்களுக்கு AI திறன் பயிற்சிகளை மைக்ரோசோஃப்ட் நிறுவனம், இலக்கவியல் அமைச்சோடு இணைந்து வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அதற்கு முன்பாக, AI விழிப்புணர்வும், அதனை அறிந்து, புரிந்து, மக்களுக்கு எடுத்தியம்பும் திறனை நாட்டுத் தலைவர்கள் கொண்டிருப்பது கட்டாயமாகும்.
அந்த நோக்கத்திலேயே இந்த AI கண்காட்சி நாடாளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதாக கோபிந்த் சொன்னார்.
இக்கண்காட்சியில், மைக்ரோசோஃப்ட் நிறுவன உயர் அதிகாரி கணேஷ் குமார் சரளமான தமிழில் AI பற்றிய முக்கிய விபரங்களை விளக்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கண்காட்சியில் கலந்து கொண்டு AI தொடர்பான விளக்கங்களைப் பெற்றுக் கொண்டனர்.